சிவகங்கை மாவட்டம், நாட்டார்குடி கிராமத்தில் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 63 வயது விவசாயி சோனைமுத்து மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், காணாமல் போன தலையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது சோனைமுத்துவுடன் இருந்த மற்றொரு விவசாயி பாண்டி, அதே மர்ம நபர்களால் தலையில் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சோனைமுத்துவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டார்குடி கிராமம் பல ஆண்டுகளாகவே அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளது. குறிப்பாக, தண்ணீர் வசதி இல்லாததால் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், பெரும்பாலான கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது குறைந்த அளவிலேயே மக்கள் வசித்து வரும் இந்த ஊரில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் மர்ம நபர்கள் எளிதாக இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/20/sivagangai-2025-07-20-17-23-21.jpg)
இன்றுதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பொறுப்பேற்ற சிவ பிரசாத், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே இத்தகைய பயங்கர சம்பவம் நிகழ்ந்திருப்பது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம், தலை ஏன் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது, மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் மற்றும் நுண்ணறிவு பிரிவுகளும் இணைந்து இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளன. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் சம்பவப் பகுதிக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.