தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவா? என்கிற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார். ‘எங்கள் நட்பை கெடுக்க வேண்டாம்’ என்றும் ஊடகங்களுக்கு வேண்டுகோள் வைத்தார் அவர்.
தர்பார் படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மும்பை கிளம்பினார். முன்னதாக சென்னையில் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கிளம்பியபோது, செய்தியாளர்கள் அவரை பேட்டி கண்டனர்.
அப்போது, ‘தேர்தலில் கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுப்பீர்களா?’ என கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், ‘எனது அரசியல் நிலையை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்றார்.
விடாத பத்திரிகையாளர்கள், ‘கமலஹாசன் தொடர்ந்து தனது பேட்டிகளில் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புவதாக கூறி வருகிறாரே?’ எனக் கேட்டனர். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், ‘ஊடகங்கள் இதை பெரிதுபடுத்தி எங்கள் நட்பை கெடுத்துவிட வேண்டாம்’ என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இப்போ பிஜேபி நேற்றுதான் தனது தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்காங்க. இத நான் ரொம்ப நாளா பேசிகிட்டிருக்கேன்.
மறைந்த பிரதமர் வாஜ்பாய் இதை தனது கனவா வச்சிருந்தார். ஒரு முறை நான் அவரை சந்தித்தபோது, நதிகள் இணைப்பை நிறைவேற்ற வலியுறுத்தி அந்தத் திட்டத்திற்கு ‘பகீரத யோஜனா’ன்னு பெயர் வையுங்கன்னு சொன்னேன். அவர் சிரிச்சுகிட்டார். பகீரதன்னு சொன்னா, சாத்தியம் ஆகாததை சாத்தியம் ஆக்குறது.
இப்போ பிஜேபி தேர்தல் அறிக்கையில், ‘நதிகளை இணைக்கணும். அதற்கு ஆணையம் அமைப்போம்’னு சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது. ஆண்டவனோட ஆசியால, மக்களோட தயவால, அவங்க என்ன ரிசல்ட் கொடுங்காங்கன்னு தெரியாது. அவங்க ஆதரவு பெற்று ஆட்சிக்கு வந்தா, முதல் வேலையா நதிகளை இணைக்கணும்.
அது மட்டும் செஞ்சாங்கன்னா நாட்டுல பாதி வறுமை போயிடும். பல கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளின் வாழ்க்கை உயரும். அத செய்யணும்னு கேட்டுக்கிறேன். தயவு செய்து தப்பா நினைக்க வேண்டாம். இது தேர்தல் நேரம். இதுக்கு மேல நான் பேச விரும்பவில்லை’ என்றார் ரஜினிகாந்த்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில், தண்ணீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிக்கு ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இந்தப் பேட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.