க.சண்முகவடிவேல்
Trichy: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க, ம.தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் போட்டிடுகின்றனர். இதனையடுத்து, ஒவ்வொரு வேட்பாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் அனல் பறக்கும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் கல்லறை மேட்டு தெரு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லறை மேட்டு தெரு அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் மதில் சுவர் கட்டப்படுவதை கண்டித்து வீடு தோறும் கருப்பு கொடி ஏற்றி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கல்லறை மேட்டு தெரு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லறை மேட்டு தெரு பகுதியில் பிரச்சனை கிளம்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“