தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தையும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய நிலையில் தமிகத்தில் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க மறுத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் அக்கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்காமல் தவிர்த்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அமமுக குக்கர் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்திலும், மக்கள் நீதி மய்யம் கட்சி பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil