ஜனநாயக நாடான இந்தியாவில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து குடிமக்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
ஆகையால் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரியவைக்கும் வகையில், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுயக்குழுவினிடையே போட்டிகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு 'எனது வாக்கு என் உரிமை' என்ற தலைப்பில் போஸ்டர் வடிவமைப்பு, பாட்டு, ரங்கோலி போட்டி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் என தனித்தனி பிரிவுகளில் போஸ்டர் வடிவமைப்பு போட்டி நடத்தப்படும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பாட்டுப் போட்டிகளும், சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு ரங்கோலி போட்டிகளும் நடத்தப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை தேர்தல் ஆணையம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
போட்டி நடைபெறும் இடம், நேரம் போன்ற விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல் தேவைப்படுவோர் 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil