தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கு தனித்தனியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்று தலைமை தேர்தல் ஆணையம் 1 இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்த முகமது ஜான், மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். பின்னர், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.க்களாக இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக் கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் இருவரும் தங்கள் ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால், தமிழகத்தில் இருந்து 3 ராஜ்ய சபா எம்.பி. பதவி காலியானது.
ராஜ்யசபா எம்.பி.க்களை எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழக சட்டப் பேரவையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில், திமுக 133 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் 18; விசிக-4; சிபிஐ-2; சிபிஎம்- 2 என ஆளும் கட்சி கூட்டணியில் 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதே போல, எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில், அதிமுக- 66 எம்.எல்.ஏ.க்கள்; பாமக 5; பாஜக 4 என மொத்தம் 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பலம்தான் அதிக அளவில் உள்ளது.
காலியாக உள்ள 3 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், திமுக அணிக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்களும் அதிமுக அணிக்கு 1 எம்.பி.யும் கிடைக்கலாம் என்கிற நிலைமை இருந்தது. ஆனால், 3 ராஜ்ய சபா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கும் தனித்தனியே தாமதம் இன்றி உடனே நடத்த வேண்டும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்இல் அதிமுகவின் முகமது ஜான் மறைவால் ஏற்பட்ட காலி இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1 ராஜ்ய சபா இடத்துக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு போட்டியிடப் போகும் பிரமுகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"