Edappadi K Palaniswami - AIADMK party Tamil News: அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் 'கடந்தாண்டு ஜூலை, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்த விதிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என வழக்கு தொடர்ந்தார்.
Advertisment
இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு படி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும், அ.தி.மு.க- வில் திருத்தப்பட்ட விதிகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீங்கபட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து இன்று (மே.16) இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க-வின் சட்ட விதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து, சென்னையில் நாளை (புதன்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil