இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் ஆணையைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
எனது சகோதரரும் லோக்சபா தலைவருமான ராகுல் காந்தி இந்த மோசடியின் அளவை அம்பலப்படுத்துகிறது. இன்று, ராகுல் காந்தி இந்தியா கூட்டணி எம்.பி-களை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு பேரணியாக வழிநடத்துவதால், நாங்கள் கோருகிறோம்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் இயந்திரம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும், அரசியல் ரீதியாக இயக்கப்படும் நீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மற்றும் நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.
திமுக இந்தப் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்”, என்று அதில் கூறியிருக்கிறார்.
இதனிடையே ஸ்டாலின் இன்று திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ’திருப்பூரில் மட்டும் 133 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திருப்பூர் மாவட்டத்திற்கு செய்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.
திருப்பூரில் 5 பாலங்களை கட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தபோது அதிமுக ஆட்சியில் அதை முடக்கினர். தொடர்ந்து அடி மேல் அடி விழுவதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பழனிசாமி. விரக்தியில் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார் எனத் தெரியவில்லை. 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும். அரசின் திட்டங்களை முடக்க உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிவி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு என்ற கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம் அமைக்கப்படும். திருப்பூரில் ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.6.5 கோடியில் அமைக்கப்படும், என்று அவர் கூறினார்.