திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்துவோம், திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு உள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை ஏற்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். இவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நவம்பரில் நடக்கவிருந்த 5 மாநில தேர்தலுடன் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மழை காரணமாக 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தை மேற்கோளிட்டு இரண்டுத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் காலியான 2 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தேர்தல் அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவாரூர் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.