திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி அன்று நடத்த இருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையிலும், அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியான இத்தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 28ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தன. திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தம்

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார்.

இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என்றும் வலியுறுத்தினர். கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Election Commission of India, திருவாரூர் இடைத்தேர்தல்

தேர்தல் ஆணையம் அறிக்கை

கருத்துக் கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார். அதில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவித்துள்ளனர்.

Election Commission of India, திருவாரூர் இடைத்தேர்தல்

மேலும், கஜா புயல் பாதித்த திருவாரூர் உள்ளிட்ட 19 தொகுதிகளில் ஏப்ரல் மாதம் வரை தேர்தல் நடத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து : 

டிடிவி. தினகரன் :

“தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும். இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது. திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டணையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

தமிழிசை சவுந்தரராஜன் : 

“திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது புயலுக்குப்பின்புஅங்கே தங்கிமருத்துவநிவாவரண பணி செய்தஅனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர்மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான்,தேர்தல்அல்ல,அவர்கள்வாழ்வைமீட்டெடுப்பதுதான் தேவை ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.” என கருத்து தெரிவித்திருக்கிறார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close