தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், தற்போது இந்த கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய், பல வெற்றிப்படங்களை கொடுத்தள்ள நிலையில், கடைசியாக இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கததில் தி கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த5-ந் தேதி வெளியான கோட் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், விஜய் அடுத்து ஒரு படம் நடித்துவிட்டு தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கட்சியின் கொடியை வெளியிட்ட விஜய், அடுத்து செப்டம்பர் 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில், தனது முதல் அரசியல் மாநாட்டை நடந்த முடிவு செய்து இதற்காக காவல்துறை அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை தரப்பில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தகவல்' வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து நாளை (செப்டம்பர் 8) மதியம் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகும்போது தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“