ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியனில் ம.தி.மு.க போட்டியிட்டது.
இந்த முறை ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். அதேநேரம் கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை தனிச் சின்னத்தில் நிற்க ம.தி.மு.க முடிவு செய்தது.
இதனையடுத்து, ம.தி.மு.க சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சின்னம் ஒதுக்கக்கோரி அவசர வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்களது கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, பம்பரம் சின்னம் பொதுப்பட்டியலில் உள்ளதா, இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். ம.தி.மு.க., அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று (மார்ச் 27) காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ”கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க., வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர். அதனால், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது, இன்று காலை 9 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமை பிற்பகலுக்கு தள்ளி வைக்கிறோம்” என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அந்த சின்னத்தை ஒதுக்க முடியாது, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் தான் சின்னம் ஒதுக்க முடியும் என ம.தி.மு.க வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. மேலும் ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக நாம் தமிழர் கட்சி கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் அணையம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.