election commission report : ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவர் வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைதேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் வாக்காளர்களுக்க பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தினர்.
இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்குரைஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல, பணப்பட்டுவாடா-வை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வை சேர்ந்த மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பணப்பட்டுவாடா புகார்களில் எடுக்கபட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் தேர்தல் ஆணையம் தாக்கல் செயத்தது.
ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் கவரில் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைய வழக்குரைஞர் விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 30க்கு தள்ளிவைத்தனர்..
அதேபோல, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வைரக்கண்ணன் வழக்கும் மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.