ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டது. புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்.
பாஜக ஆட்சிக்கு எதிராக, ரஃபேல் பேர ஊழலை எதிர்க்கட்சிகள் ஆயுதமாக்கி இருக்கின்றன. இந்த ஊழல் தொடர்பாக, ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று (ஏப்ரல் 2) மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. தலைமை- இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன், வரவேற்புரை- அ.கணேசன், நூல் வெளியீடு- இந்து குழும தலைவர் என்.ராம், நூல் பெறுபவர்கள்- லெப்டினண்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குனர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெயராணி, நன்றி- க.நாகராஜன் என இந்த நிகழ்வுக்கான அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர். இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர். தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.