TamilNadu Updates: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
ஏப்., 15 வரை கோடை மழை தொடரும்
குமரி கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தென் மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. வரும், 15ம் தேதி வரை மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அக்டோபருக்குள் 5 புதிய கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் ‘ஸ்புட்னிக் – வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவாவாக்ஸ், சைடஸ் கடிலா, பாரத் பயோடெக்கின் இன்ட்ராநேசல்’ ஆகிய ஐந்து தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திட்டமிட்டபடி தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவி களுக்கு, திட்டமிட்ட படி எழுத்துத் தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளான நேற்று மட்டும் நாட்டில் புதிதாக 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் 16 லட்சம் பேருக்கு மட்டும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதைவிட அதிகமாகவே நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.நேற்று மட்டும் நாட்டில் 6.38 லட்சம் தடுப்பூசி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்பு
நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான குடியரசுத் தலைவரின் உத்தரவு எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால் சுஷில் சந்திரா நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர்கள் பரிந்துரை செய்து அனுமதி அளித்துள்ளனர்.
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால் ஏப்ரல் 14ம் தேதி இரவு முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை விதித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி ரத்து செய்ய வேண்டும். தகுதியுள்ள அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.6,000 செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி, ஏப்ரல் 14ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 தொற்றுகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 19 பேரு உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 927 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் தேதியை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 தேர்வு சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடக்கும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி, “இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐஏ எஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்ச்சல் முகாம்களை 400-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்வில் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கோவையில் ஒரு உணவுவிடுதியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் உணவு விற்பனை நடந்ததாக கூறி, உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை காவல் துறையினர் தாக்கிய சம்பவத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவரச கால பயன்பாட்டு அனுமதி அளித்துள்ளது. இத்தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப் படும் மூன்றாவது தடுப்பூசியாக இருக்கும். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதனையடுத்து சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 146 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம், தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது, இரவு ஊரடங்கை அமல் படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
கொரோனா விதிமுறை மீறல்கள் காரணமாக மக்களிடம் இருந்து அபராதமாக ரூ. 2,52,34,900 வசூலிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு. முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மட்டும் ரூ. 89,61,300 வசூல் செய்யப்பட்டுள்ளது. 8ஆம் தேதி முதல் இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சித்திரைத் திருவிழாவை வழக்கம் போல் நடத்த வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் கிராமியக் கலைஞர்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறு நாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை சீராக உள்ளது என்று குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் 30 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சித்திரைத் திருவிழாவை வழக்கம்போல் நடத்தக்கோரி மதுரை தமுக்கம் மைதானத்தில் கிராமியக் கலைஞர்கள், சிறு, குறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை 80% நிறைவடைந்துள்ளது. சூரப்பா பதவி முடிந்து எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதியரசர் கலையரசன் குழு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,188 புள்ளிகள் சரிந்து 48.402 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 353 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14 ஆயிரத்து 481 புள்ளிகளில் வணிகமாகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 904 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை கருதி உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நேரிடையாக முறையிடும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி முதல் தென் தமிழக மாவட்டங்களில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.