சென்னையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப்பேசியுள்ள விவகாரம், அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், 2018ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார். கட்சி துவங்கிய 15 மாதங்களுக்குள்ளேயே மக்களவை தேர்தல் மட்டுமல்லாது சட்டசபை இடைத்தேர்தலையும் சந்தித்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.சட்டசபை இடைத்தேர்தலிலும் குறிப்பி டத்தக்க வாக்குகளை கமலின் கட்சி பெற்றது.
இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப்பேசியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிடி ஆயோக் கூட்டத்திற்காக, கடந்த வாரம் டில்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரசாந்த் கிஷோர் மற்றும் அவர் சார்ந்த நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்துப்பேசியிருந்ததாக டில்லி வட்டாரம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2014 மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி தலைமையில் பெரும்பான்மை வெற்றி, பீகார் சட்டசபை தேர்தலில், தீஷ் குமார் வெற்றி, ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி அறுதிப்பெரும்பான்மை வெற்றி. இந்த வெற்றிகளின் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு இருந்ததை யாராலும் மறுக்க இயலாது.
அந்த பிரசாந்த் கிஷோர், தற்போது கமலுடன் ஆலோசனை நடத்தியிருப்பது,தமிழக அரசியலில் பெரும்பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.