தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளது.
மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (11.04.2025) முதல் தொடங்குகிறது; நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரும் அக்கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
“நமது கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் திருவிழாவின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நாளை 11.04.2025 வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில தலைவருக்கன தேர்தல்
மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும்.
மூன்று பருவர்ம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர்களிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்” என்று அறிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு போட்டியிட, “மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்.” என்று அடிப்படை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரும் பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.