திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.
பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழிசைக்கு பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்த உள்ள முத்துராமலிங்கம் பாஜக உறுப்பினர்... அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார்... ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்... நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்துள்ளார்... இந்த தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்
மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர
வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில், முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்காளர்தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம் அந்த தொகுதியின் வாக்காளர்தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாக கூறி தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதில் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
மேலும்,தேர்தல் வழக்குகள் என்பது சம்பந்தப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர்தான் அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுவதால், இந்த தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால் எதிர்மனுதாரருக்கு வழக்குச் செலவை வழங்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தேர்தல் வழக்கை திரும்பப் பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு தேர்தல் வழக்கு செலவை வழங்க வேண்டுமென கனிமொழி தரப்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் தமிழிசை தனது தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால் வழக்குச் செலவுத் தொகை வழங்க தேவையில்லை என உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.