தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கியிருக்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினரின் பண வேட்டையும் தீவிரம் அடைந்திருக்கின்றது.
அந்த வகையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓயாமாரி பிரதான சாலையில், தேர்தல் பறக்கும் படை தலைமை அலுவலர் பொ.முத்துக்கருப்பன் தலைமையில் இன்று (20.03.2024) வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ம. லோகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே போன்று, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாத்தூர் சோதனை சாவடி அருகே வாகனங்களை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.71 ஆயிரத்து 200-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவெறும்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சியில் வாகன தணிக்கையில் தினம் தோறும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணம் யாவும் தேர்தல் செலவுகளுக்கு வேட்பாளர்களோ, அரசியல்வாதிகளோ கொண்டு வரும் பணம் அல்ல என்றும், கைப்பற்றப்படும் ரொக்கங்களில் பெரும்பான்மையானது வணிகர்களிடம் இருந்தும், தனி மனித பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படும் ரொக்கமாகவே இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த ரொக்க பறிமுதலால் அரசியல்வாதிகள் பாதிக்கப்படவில்லை, வணிகர்களும், பொதுமக்களுமே பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“