Advertisment

தி.மு.க.,வின் முதன்மை நன்கொடையாளர்; ரூ.509 கோடி அளித்த லாட்டரி மார்ட்டின் நிறுவனம்

இந்தியா அளவில் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம்; தி.மு.க.,வின் முதன்மை நன்கொடையாளராக ரூ. 509 கோடி நன்கொடை

author-image
WebDesk
New Update
Meet electoral bonds donor number 1 Santiago Martin labourer turned Lottery King

சாண்டியாகோ மார்ட்டின்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arun Janardhanan , Deeptiman Tiwary

Advertisment

தேர்தல் பத்திரங்களை அதிக அளவில் வாங்கிய லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2019 மற்றும் 2024 க்கு இடையில் ரூ. 1,300 கோடிக்கு மேல் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது, மேலும் அதன் மொத்த கொள்முதலில் கிட்டத்தட்ட 40%ஐ தி.மு.க.,வுக்கு நன்கொடையாக அளித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Electoral bonds data: Future Gaming, Bond Buyer No. 1, was DMK’s top donor at Rs 509 crore

ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க, தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற்ற கட்சிகளில் ஒன்றாகும்.

தரவுகளின்படி, ஏப்ரல் 19, 2019 முதல் நவம்பர் 14, 2023 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க மொத்தம் ரூ.656.5 கோடியைப் பெற்றுள்ளது. இதில் ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2023 வரை சாண்டியாகோ மார்ட்டின் நடத்தும் பியூச்சர் கேமிங் நிறுவனத்திலிருந்து பெற்ற ரூ.509 கோடியும் அடங்கும்.

2020-21 ஆம் ஆண்டில் ஃபியூச்சர் கேமிங்கிலிருந்து தி.மு.க தனது முதல் தவணை தேர்தல் பத்திரங்களை (ரூ. 60 கோடி) பெற்றது. 2021-22ல் இந்த தொகை ரூ.249 கோடியாக அதிகரித்துள்ளது.

Electoral bonds data: Future Gaming, Bond Buyer No. 1, was DMK’s top donor at Rs 509 crore

2021 ஏப்ரலில் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வை வெளியேற்றி, தி.மு.க ஆட்சியை கைப்பற்றிய தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

2022-23 ஆம் ஆண்டில், பியூச்சர் கேமிங்கிலிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க மேலும் ரூ.160 கோடியைப் பெற்றது. மீதமுள்ள தொகை ஏப்ரல் 1, 2023 அன்று வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த ஆண்டு வாரியான தரவுகளின்படி, 2019 மே பொதுத் தேர்தல் சமயத்தில் 2019-2020 ஆம் ஆண்டில் தி.மு.க மொத்தம் ரூ 45.50 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.10 கோடி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் ரூ.1.50 கோடி, ராம்கோ சிமெண்ட்ஸ் ரூ.5 கோடி, மெகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரூ.20 கோடி, அப்பல்லோ ரூ.1 கோடி, திரிவேணி ரூ.5 கோடி, பிர்லா ரூ. ரூ.1 கோடி, ஐ.ஆர்.பி ரூ.2 கோடி ஆகியவை அடங்கும்.

2020-2021 ஆம் ஆண்டில், தி.மு.க மொத்தம் ரூ.80 கோடி நன்கொடையைப் பெற்றது. ஃபியூச்சர் கேமிங் ரூ.60 கோடி நன்கொடை அளித்தது, மெகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரூ.20 கோடி நன்கொடை அளித்தது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், 2021-2022 நிதியாண்டில் தி.மு.க பெற்ற தேர்தல் பத்திர நன்கொடைகள் 302 கோடி ரூபாய் வரை என மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. ஃபியூச்சர் கேமிங் மட்டும் ரூ.249 கோடியும், மெகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ரூ.40 கோடியும், சன் டி.வி நெட்வொர்க் ரூ.10 கோடியும், இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.4 கோடியும், திரிவேணி ரூ.3 கோடியும் வழங்கியுள்ளன.

பிப்ரவரி 2022 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. இந்தக் காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் வழியாக வந்த நிதியின் ஓட்டம், குறிப்பாக ஃபியூச்சர் கேமிங் போன்ற நிறுவனங்களில் இருந்து, வேகத்தைத் தக்கவைத்தது.

முக்கிய நன்கொடையாளர்களில், ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் பல ஆண்டுகளாக தி.மு.க.,வுடன் நெருங்கிய தொடர்புடையது. அதன் உரிமையாளர் சாண்டியாகோ மார்ட்டின், 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் தி.மு.க.,வின் முதல் குடும்பத்துடன் நெருங்கிய உறவால் குறிவைக்கப்பட்டார்.

மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெருக்கமானவராக இருந்து, பியூச்சர் கேமிங் நிறுவனம் தி.மு.க.,வுக்கு ரூ.249 கோடி நன்கொடை அளித்த காலக்கட்டமான 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.,வின் அரசியல் மற்றும் வியூக நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.

கூடைப்பந்து வீரர் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.,வின் சிறிய கூட்டணிக் கட்சிகளுடன் சீட் பகிர்வு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க.,வில் டிக்கெட் பெறத் தவறிய ஆதவ் அர்ஜூனா, கடந்த மாதம் தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான வி.சி.க.,வில் சேர்ந்தார்.

தி.மு.க.வின் மற்றொரு நன்கொடையாளரான திரிவேணி நிறுவனம், சேலத்தை பூர்வீகமாகக் கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது, மேலும் ஒடிசாவில் சுரங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த LMW நிறுவனம் இயந்திரக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

2022-2023 ஆம் ஆண்டில், ஃபியூச்சர் கேமிங்கிலிருந்து ரூ. 160 கோடியும், மெகா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மூலம் ரூ. 25 கோடியும் சேர்த்து, தி.மு.க.,வுக்கு தேர்தல் பத்திரப் பங்களிப்புகள் ரூ.185 கோடியாகச் சேர்ந்தன. ஃபியூச்சர் கேமிங் 2023ல் கூடுதலாக ரூ.40 கோடியை வழங்கியுள்ளது.

ஃபியூச்சர் கேமிங்கை உள்துறை அமைச்சகம், இந்திய கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) மற்றும் பல மத்திய ஏஜென்சிகள் மோசடியான லாட்டரி வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனமாக குறிப்பிடுகின்றன. இது 2015 முதல் உள்துறை அமைச்சகத்தின் ஸ்கேனரின் கீழ் உள்ளது.

செப்டம்பர் 2023 இல், உள்துறை அமைச்சகம் மார்ட்டின் நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் "மோசடிகள்" மற்றும் "முறைகேடுகள்" பற்றி லாட்டரி நடத்தும் எட்டு மாநிலங்களுக்கு கடிதம் எழுதி, அவர்களை விலகி இருக்கச் சொன்னது. மார்ட்டின் மற்றும் அவரது லாட்டரி நிறுவனங்களுக்கு எதிராக "கடுமையான குற்றச்சாட்டுகளுடன்" புகார்கள் வந்துள்ளதாக கடிதம் குறிப்பிட்டுள்ளது என சனிக்கிழமையன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் அடுத்த மாதமே ரூ.190 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஃபியூச்சர் கேமிங்கிற்கு எதிரான பணமோசடி விசாரணையை அமலாக்க இயக்குநரகம் தொடங்கியது. அந்த ஆண்டு ஜூலைக்குள், 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது. ஏப்ரல் 2, 2022 அன்று, இந்த வழக்கில் 409.92 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 7 ஆம் தேதி, பியூச்சர் கேமிங் ரூ.100 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment