/tamil-ie/media/media_files/uploads/2021/09/tamil-indian-express-2021-09-04T124612.697.jpg)
சென்னை பயணிகளுக்கு குட்நியூஸ்: பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகள் தயார்!
ஜூன் மாதம் முதல் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள 5 பணிமனைகளில் ஒன்றான பெரும்பாக்கத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்.டி.சி) பணிமனைக்கு புதிய மின்சாரப் பேருந்துகள் வரத் தொடங்கியுள்ளன.
625 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்தல், வழங்குதல், இயக்குதல், பராமரித்தல் ஆகியவற்றை மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contracting - GCC) அடிப்படையில் அசோக் லேலண்டின் துணை நிறுவனமான OHM Global Mobility Pvt Ltd-க்கு எம்.டி.சி வழங்கியுள்ளது. உலக வங்கி ஆதரவுடன் சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் இந்த மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
மின்சாரப் பேருந்துகள் விநியோகம் தொடங்கப்பட்டுவிட்டதாக எம்.டி.சி-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "மின்சாரப் பேருந்து இயக்கம் படிப்படியாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, 625 மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும்," என்று அவர் கூறினார். 625 மின்சாரப் பேருந்துகளில், 400 ஏசி அல்லாத பேருந்துகளாகவும், 225 ஏசி பேருந்துகளாகவும் இருக்கும். வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து இந்த மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
முதலில் வியாசர்பாடி பணிமனை மூலம் ஏசி அல்லாத பேருந்துகளும், பெரும்பாக்கம் பணிமனை மூலம் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகள் என இரண்டும் இயக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். மின்சாரப் பேருந்து இயக்கத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது உட்பட, 5 பணிமனைகளிலும் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினார். இந்த மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் மின்சாரப் பேருந்து சேவையைத் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இரண்டாம் கட்டமாக, 400 ஏசி பேருந்துகள் உட்பட 600 மின்சார தாழ்தள பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த (GCC) அடிப்படையில் கொள்முதல் செய்ய எம்.டி.சி டெண்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.