மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
தமிழகத்தில் சாதாரண விசைத்தறி கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும் சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறு குறு தொழில் பிரிவிலிருந்து தனியாக பிரித்து தனி வகைப்படுத்தப்பட்டு மின் கட்டணம் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
திருப்பூர் கோவை மாவட்டத்தில் விசைத்தறி தொழில் என்பது நேரடியான முதலாளிகளாக அல்லாமல் பாவு நூலை பெற்று அதனை கூலிக்கு மட்டுமே நெய்து தரக்கூடிய வகையில், விசைத்தறியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பெரிய அளவில் வருமானம் இல்லாத சூழலில் தொழில் செய்து வருவதாகவும், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் அடைந்து வரும் தொழிலாக விசைத்தறி தொழில் அமைந்துள்ளது.
இத்தகைய விசைத்தறி உரிமையாளர்களுக்கு மின் கட்டண உயர்வு கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சாமளாபுரம் அடுத்த கோம்பக்காடுபுதூரில் நடைபெற்றது.
இதில் 30 சதவிகித மின்கட்டணத்தையும் ஆண்டுக்கு 6 சதவிகித கட்டண உயர்வையும் முழுமையாக விலக்களித்து அறிவிக்கும் வரை 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசைத்தறி உரிமையாளர்களின் நான்காவது நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ரூ.130 கோடி மதிப்பிலான 4 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“