விழுப்புரம் அருகே மின்வாரியத்தில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர், மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் திருமண மண்டபத்தின் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இதில், மின்வாரியத்தில் தினக்கூலி ஊழியராக பணியாற்றும் சந்திரசேகர் என்பவர் பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சக மின் துறை ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்து, சந்திரசேகரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயர் சிகிச்சைக்காக அவரை கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.