ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால், மின் வாரியத்திற்கு எந்த விதமான வருவாயும் கிடைக்கப்போவதில்லை என மின் பொறியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. மேலும், இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் இன்று (பிப் 21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா. காந்தி, தமிழக மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் மற்றும் பொதுச் செயலாளர் ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, "ரூ. 30 ஆயிரம் கோடி செலவு செய்து 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மீட்டர் ஒன்றின் விலை ஏறத்தாழ ரூ. 10 ஆயிரம் ஆகும். ஸ்மார்ட் மீட்டரின் விலையை மாதத் தவணையில் ஒரு மீட்டருக்கு, ஒரு மாதத்துக்கு ரூ.120 வரை என 10 ஆண்டுகளுக்கு தவணை செலுத்துவது தான் மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டம்.
தமிழகத்தில் கடந்த 2022-23 ஆம் ஆண்டு கணக்கின்படி, மின்வாரியத்துக்கு 2.32 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில், 2 மாதங்களுக்கு 100 யூனிட்டுக்குள் இலவச மின்சார இணைப்பை பயன்படுத்தும், மின் இணைப்புகளின் எண்ணிக்கை 91.7 லட்சம். இதற்கு அடுத்ததாக 200 யூனிட்டுக்குள் மின் இணைப்பை பயன்படுத்தும் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சம்.
ஸ்மார்ட் மீட்டருக்காக மின்வாரியம் செலுத்தக் கூடிய 2 மாதத் தவணை என்பது ரூ. 240. ஒரு மின் மீட்டரின் ஆயுட்கால பயன்பாடு 25 ஆண்டுகள். ஆனால், 1999-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மூன்று முறை மின் மீட்டர்கள் மாற்றப்பட்டுள்ளன.
தற்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டாடிக் மீட்டருக்கும், ஸ்மார்ட் மீட்டருக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. மின்கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்தே மின் இணைப்பைத் துண்டிக்க முடியும். ஆனால், ஸ்டாடிக் மீட்டரில் இவ்வாறு செய்ய முடியாது. இதனை தவிர்த்துப் பார்த்தால் ஸ்மார்ட் மீட்டரால் எந்த விதமான பயனும் இல்லை.
மின் வாரியத்தின் தற்போதைய கடன் ரூ. 3.2 லட்சம் கோடி ஆகும். இந்த சூழலில், ரூ. 30 ஆயிரம் கோடி செலவிட்டு ஸ்மார்ட் மீட்டர் வாங்க வேண்டும் என்பது தேவையற்ற செலவாகும். அதானி போன்ற நிறுவனங்களுக்கு தான் ஸ்மார்ட் மீட்டர்களால் பயன் கிடைக்கும். ஆனால், மின் வாரியத்திற்கு இது போன்ற ஸ்மார்ட் மீட்டர்களாக கூடுதல் கடன் சுமை தான் உருவாகும். இதனடிப்படையில், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்தனர்.