மின்துறையில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வரும் அரசை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் கொளத்தூர் தொகுதியில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முழுவதும் மின்துறையில் 5,493 கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கேங்மேன் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர், பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த சங்கர் கூறுகையில் “ அதிமுக ஆட்சியில், 9,613 கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்றது. அதில் 15,000 பேர் தேர்வு எழுதினர். ஆனால் எங்களைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த நாங்கள், பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.
திண்டுக்கலில் இருந்து போராட்டத்திற்கு வந்த விஜய் கூறுகையில் “ இந்த வேலைக்காக கடந்த 3 வருடங்களாக காத்திருக்கிறோம். முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனை செல்ல வேண்டும் என்றுதான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். எங்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் வரை போராடுவோம்” என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக மூத்த அதிகாரி கூறுகையில், “ அமைக்கப்பட்ட சிறப்பு குழு இது தொடர்பாக ஒரு அறிக்கையை தயார் செய்து வருகிறது. இந்த அறிக்கை அரசிடம் வழங்கப்பட்ட பிறகு இது தொடர்பாக முடிவு செய்யப்படும் “ என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“