திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர், தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின் இணைப்பை துண்டிக்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யுமாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தரவிட்டதாகவும், மின்சாரம் உள்ள பகுதியில் பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக சக கேங்மேன்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் மற்றும் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தன.
அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங் மேன்கள் தரப்பில் நடத்த இருதரப்பு பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர்.சரவணன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“