scorecardresearch

அதிகாரி சஸ்பெண்ட்.. ஒரே மின் இணைப்புகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை: செந்தில் பாலாஜி விளக்கம்

ஒரு நபரின் பெயரில் உள்ள பல மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என வெளியான தகவல் முற்றிலும் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

TN ministr senthil balaji recent tweet on photoshop party leader, apology letter in flight
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் அண்மையில் அரசு அறிவிப்பு போல் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் பரவியது. திருவெறும்பூர் பிரிவு என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியானது. அதில், ஒரு வீடு அல்லது குடியிருப்பில் ஒரு மின்சார இணைப்பு மட்டும் தான் தரப்பட வேண்டும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதில் மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து நேற்று (மார்ச் 7) விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 விழு காட்டிற்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 09.09.2022 அன்று வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில்/குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின்னிணைப்புகளைப் பொதுப்பயன்பாட்டிற்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு/வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட, களஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Electricity minister senthil balaji clarifies services merger issue