நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு பின்பு மின்சாரம்:
தமிழகத்தை தாக்கிய கஜ புயலால் கடுமையான சேதங்களை சந்தித்த டெல்டா மாவட்டங்கள் சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. வீடுகள், நிலங்கள், உறவினர்களை இழந்து வாடும் அப்பகுதி மக்களுக்கு பொதுமக்கள் உட்பட் பலரும் தம்மால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றன.
கஜ புயலால் பலத்த சேதமடைந்த பகுதிகளில் வேதாரண்யமும் ஒன்று. இந்த பகுதிகளில் அடித்த காற்றின் வேகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி இருளில் தவித்து வந்தனர்.
இந்நிலையில், மின்விநியோகம் கொடுக்கும் முயற்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டன.வெளி மாவட்டத்தை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் இரவுபகலாக ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன்விளைவாக 11ம் நாளான நேற்று (26.11.18) இரவு முதல்கட்டமாக வேதாரண்யம் நகர் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளுக்கு படிப்படியாக ஒரு வார காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
10 நாளாக வேதாரண்யம் நகரம் இருளில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.