/indian-express-tamil/media/media_files/GoiBD9pwPr1kk7pDi7M1.jpeg)
Electricity tariff hike ;Workers protest in several districts in Tamilnadu
தொழில்துறை அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் இன்று கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.டி.3 பி இணைப்பு 0-112 கேவி நுகர்வோர்கள் முன்பு இருந்ததை போல் ஒரே பிரிவில் வைத்து கேவி ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.154-ஆக ( 430 சதவீதம்) உயர்த்தப்பட்டதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தொழில்துறை அமைப்பினர் கடந்த ஓராண்டாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல் கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான காரணம் பேட்டையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அன்றைய தினமே அறிவித்தனர்.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மின் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட செய்தியில், தொழில் அமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் தொழில்துறை அமைப்பினர் இன்று முதல் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்களும், கோவையில் 30 ஆயிரம் நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63 ஆயிரம் எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் 3 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தங்களின் கோரிக்கை தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மின்வாரிய தலைமை பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழில்துறை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கதவடைப்பு போராட்டத்தில் கொடிசியா, காட்மா, சீமா, ஓஸ்மா, கோப்மா உள்ளிட்ட தொழில் அமைப்புகள் பங்கேற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.