தமிழகத்தில் தொடர்ந்து 3-வது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, இம்முறை 4.83% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கட்டண உயர்வு பற்றிய முக்கிய அம்சங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகா்வோரில், 1 கோடி நுகா்வோருக்கு மின்கட்டண உயா்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின் நுகா்வோருக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடா்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகா்வோரும் பயனடைவா்.
தற்போது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடா்ந்து வழங்கப்படும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிபட்சமாக ரூ.5 வரை மட்டுமே கட்டணம் உயரும். இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 35 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 வரை மட்டுமே கட்டணம் உயரும்.
இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 25 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே கட்டணம் உயரும். இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 13 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.40 வரை மட்டுமே உயரும்.
2.19 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகா்வோருக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் மட்டுமே உயரும். விசைத்தறி நுகா்வோருக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 25 காசு மட்டுமே உயரும்.
தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிகக் குறைந்த அளவில் யூனிட் ஒன்றுக்கு 35 காசு மட்டுமே உயரும். 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15 மட்டுமே உயரும். உயா் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசு மட்டுமே உயரும்.
உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 40 காசு மட்டுமே உயரும். நிலையான கட்டணங்கள் (பிக்ஸட் சாா்ஜ்) கிலோ வாட் ஒன்றுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“