Elephant Arisi Raja captured last night : பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்றிரவு பிடித்தனர். சில மாதங்களாக மக்களை பெரிதும் அச்சத்துக்கு ஆளாக்கிய அரிசி ராஜா பிடிபட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Elephant Arisi Raja captured last night
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலைக் குன்றுகளில் யானைகள் அடிக்கடி மலைகளில் இருந்தும் காடுகளில் இருந்தும் வெளியேறி மக்கள் வசிப்பிடத்தில் சுற்றிவருவதும், விவசாய நிலங்களை அழிப்பதும் வாடிக்கையாக நிகழும் ஒன்றாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களாக மக்கள் நடமாடும் பகுதியில் சுற்றித்திரிந்த அரிசிராஜா யானையின் தாக்குதலுக்கு ஆளாகி மூன்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காடுகளை அழித்தல், காட்டு உயிரினங்களின் பாதைகளில் இடையூறு ஏற்படும் வகையில் கட்டிடங்கள் எழுப்புதல் போன்ற நடவடிக்கைகளால் பெரிதும் மலையை ஒட்டியுள்ள கிராமவாசிகள் தான் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நவமலை, ஆழியாறு, சேத்துமடை, சர்க்கார்பதி, பருத்தியூர், கோபால்சாமி மலை, தாடகநாச்சி மலை, மற்றும் அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்தது இந்த யானை. அர்த்தனாரிபாளையம் பகுதியில் சுற்றித்திருந்த காட்டு யானையை பிடிப்பது தொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இவர்களின் முயற்சிகளை நேரில் வந்து பார்வையிட்டார் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு.
இந்த யானையை பிடிக்க கபில் தேவ் மற்றும் சலீம் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது. ட்ரோன்கள் மூலம் அரிசி ராஜாவின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு ஆண்டியூர் என்ற பகுதியில் சுற்றித்திருந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் கயிறு கட்டி தடுத்தனர் வனத்துறையினர். பின்னர் கால்நடை மருத்துவர்களால் அரிசி ராஜாவுக்கு மயக்க ஊசிகள் போடப்பட்டது. அங்கிருந்து அரிசி ராஜாவை டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகழியாறு வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நடிகை கஸ்தூரி கருத்து
தமிழக வன உயிரினங்கள் குறித்து தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அரிசி ராஜா குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
காட்டுராஜாவுடைய வீட்டை அழிச்சு விவசாயம் பண்ணா அவனுக்குத்தான் எங்க போவான்.... TN must restore wildlife habitat - this is an urgent need. Not to be ignored or delayed. https://t.co/UrBn7V2MKD via @ietamil
— Kasturi Shankar (@KasthuriShankar) November 14, 2019
வனக் கால்நடை உதவி இயக்குநர் மனோகரன், மருத்துவர்கள் சுகுமார், கலைவாணன், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரக அலுவலர்கள் காசிலிங்கம், சக்திவேல், நவீன் குமார் உள்ளிட்டோர் இந்த யானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க : சின்னத்தம்பி யானை பிடிபட்டது! பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.