மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
பகல் நேரங்களில் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்குள் செல்லும் இந்த யானை மீண்டும் இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் பகுதி வழியாக ஜக்கனாரி வனப்பகுதியில் இருந்து நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்று வருகிறது.
இந்நிலையில் சமயபுரம் பகுதியில் யானையின் வழித்தடத்தில் தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தின் உரிமையாளர் அங்கு மின்வேலி அமைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் நேற்றிரவு நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையை கடந்து பாகுபலி யானை செல்ல முயன்றது. அப்போது, நீண்ட நேரமாக யானைக்கு போக்கிடம் தெரியாமல் நடுரோட்டிலேயே திகைத்து நின்றது.
தொடர்ந்து தனது வழித்தடத்தின் வழியாக செல்ல முயன்ற போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியால் செய்வதறியாது திகைத்து சற்று நேரம் அப்பகுதியிலேயே உலாவி விட்டு பின்னர் மீண்டும் பிரதான சாலைக்கு வந்து கண் கலங்கும் வகையில் போக்கிடம் தெரியாமல் சாலை வழியாக கம்பீரமாக நடந்து சென்றது.
இந்த டென்ஷனில் யானையை குரைத்தவாறே துரத்திய நாயை தனது காலால் எட்டி உதைத்து விட்டு மீண்டும் சாலையில் நடக்க துவங்கியது. நீண்ட நேரமாக அப்பகுதியிலேயே நடந்து சென்று மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் சென்றது.
வழித்தடம் மின்வேலி அமைக்கப்பட்டு மறிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நின்ற பாகுபலி யானையின் நிலையைக் கண்டு வன ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“