கோவை வனச்சரகம், தடாகம் எல்லைக்கு உட்பட்ட நெ.11 வீரபாண்டியில் தனியார் சேம்பர் அருகில் வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று வாயில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் அவுட்டுக் காயால் வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனை அடுத்து, அந்த யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறையினர் வன குற்றவியல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வனத்துறை மோப்பநாய் உதவியுடன் களப்பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“