முதுமலை காடுகளில் பணிபுரிந்த இந்தியாவின் மிக முக்கிய யானை ஆய்வாளர் மரணம்

தமிழகத்தில் யானைகள் பற்றி விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவரும் இந்தியாவின் மிக முக்கிய யானைகள் ஆய்வாளருமான அஜய் தேசாய் நேற்று இரவு கர்நாடகாவின் பெலகாவியில் காலமானார். அவருக்கு வயது 63.

By: Updated: November 21, 2020, 12:00:29 PM

தமிழகத்தின் முதுமலை காடுகளில் யானைகள் பற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவரும் இந்தியாவின் மிக முக்கிய யானைகள் ஆய்வாளருமான அஜய் தேசாய் நேற்று இரவு கர்நாடகாவின் பெலகாவியில் காலமானார். அவருக்கு வயது 63. அஜய் தேசாய் மறைவுக்கு சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அஜய் தேசாய் இந்தியாவின் மிக முக்கிய யானை ஆய்வாளர். இவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (பி.என்.எச்.எஸ்) யானைத் திட்டத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். அஜய் தேசாயின் ‘இந்திய யானை: விநாயகர் தேசத்தில் ஆபத்தில் உள்ளது’ என்ற நூல் நாட்டில் யானைகள் பற்றிய ஆய்வுகளுக்கு ஆரம்ப கள வழிகாட்டிகளில் ஒன்றாகும். அவர் யானைகள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆராய்ச்சியாளராக அஜய் தேசாய்1980-களில் முதுமலைக் காடுகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி, அவற்றைப் பின் தொடர்ந்து, அவற்றின் மேய்ச்சல் பரப்பு, விவசாய பயிர்களை மேய்தல், அவற்றின் சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆராய்ந்தவர்.

கலக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அவருடைய ஆரம்ப கால ஆராய்ச்சிகள் இருந்தன.

தமிழக வனத்துறை யானைகள் தொடர்பான முக்கியமான விஷயங்கள் குறித்து அஜய் தேசாய் உடன் ஆலோசித்தது. கோயம்புத்தூர் வனப் பகுதியில் வினாயகன் மற்றும் சின்னதம்பி யானைகள், ஆனைமலை புலிகள் பாதுகாப்பு பகுதியில் அரிசி ராஜா, நீலகிரி நிலப்பரப்பில் இன்னும் சிலரைப் பிடித்து இடமாற்றம் செய்ய அவரது நிபுணத்துவம் கோரப்பட்டது. அவர் இறந்த நேரத்தில், தேசாய் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும், கோயம்புத்தூர் வனப் பகுதியில் யானைகளின் இறப்பையும் ஆய்வு செய்ய வனத்துறையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

இந்தியாவில் மிக முக்கியமான யானை ஆய்வாளரும் தமிழகத்தில் பெரிய அளவில் பணி செய்தவருமான அஜய் தேசாய் கர்நாடகாவின் பெலகாவியில் நேற்று (நவம்பர் 20) இரவு காலமானார். அவரது மறைவுக்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், “அஜய் தேசாய் நான் அமைத்த யானை பணிக்குழுவின் மிக முக்கியமான பகுதியாக இருந்தார். யானையை தேசிய பாரம்பரிய விலங்கு என்று அறிவிக்க வழிவகுத்தது. தேசாய் உணர்ச்சிமிக்க அறிஞர் மற்றும் சிறந்த மனிதர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக முக்கிய யானை ஆய்வாளர் அஜய் தேசாய் சற்றுமுன் காலமானார் என்னும் செய்தி மிகுந்த மன வருத்தத்தை தருகிறது….

Posted by Sundar Rajan on Friday, 20 November 2020

யானை ஆய்வாளர் அஜய் தேசாய் மறைவுக்கு பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். சுந்தர் ராஜன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்தியாவின் மிக முக்கிய யானை ஆய்வாளர் அஜய் தேசாய் சற்றுமுன் காலமானார் என்னும் செய்தி மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. பூவுலகின் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆராய்ச்சியாளராக 1980களில் முதுமலைக் காடுகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் அஜய்.

யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி, அவற்றைப் பின் தொடர்ந்து, அவற்றின் மேய்ச்சல் பரப்பு, வேளாண் பயிர் மேய்தல் மற்றும் சமூக வாழ்க்கை முதலான கூறுகளை ஆராய்ந்தறிந்தவர்.

வாழிட அழிப்பு, காடு துண்டுபடுதல் ஆகியவையே யானைகள் தோட்ட நுழைவிற்கு தலையாய காரணம் என்ற கூற்றை மீண்டும் மீண்டும் எடுத்துறைத்தவர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் IUCN யானைகள் நிபுணர் குழுவின் தலைவராகவும் இருந்தார். மசினங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட கேளிக்கை விடுதிகள் மற்றும் யானைகளின் வலசைதடங்களை ஆய்வு செய்ய நீதி மன்றம் அமைத்த குழுவில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்தவர்.

சம கால யானை ஆய்வாளரின் இழப்பு ஈடு செய்யமுடியாதது.

யானைகளின் வாழ்விடங்களையும், வலசைப்பாதைகளையும் பாதுகாப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். – பூவுலகின் நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அஜய் தேசாயின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், இயற்கை பாதுகாப்பாளர்கள், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து அவருடைய பணிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Elephant expert ajay desai passes away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X