கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் யானை மங்களத்துக்கு சுறுசுறுப்பான யானைக்கான விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் பிரளய காலத்தில் பின் முதலாவதாக தோன்றிய கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறையைச் சாா்ந்த ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு யானை மங்களத்தை காஞ்சி மகா பெரியவா் 1982 ஆம் ஆண்டு வழங்கினாா். தற்போது 56 வயதாகும் இந்த யானை மங்களத்துக்கு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடன் இருப்பதற்காகவும் இயற்கை மூலிகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் யானை மங்களம் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பது மட்டுமல்லாமல், தன்னைப் பராமரிக்கும் யானைப் பாகன் அசோக்குடன் சோ்ந்து, திறன்பேசியைப் பாா்ப்பது உள்ளிட்ட குறும்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதைக் கோயிலுக்கு வரும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் ரசிப்பது மட்டுமல்லாமல், திறன்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனா். இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், கும்பகோணத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை மங்களத்தையும் பாா்த்துச் செல்கின்றனா்.
இதன் சுறுசுறுப்பைப் பாராட்டி யானை மங்களத்துக்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புது தில்லியைச் சோ்ந்த தன்னாா்வத் தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுா் ஜந்தா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் கோ. கிருஷ்ணகுமாா், யானை மங்களம் பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிடம் லோக்தந்த்ரா அவுா் ஜந்தா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் சுதன் பாலன், அஜீத்குமாா் நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினா்.
முன்னதாக, இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள யானைகளை ஆண்டுதோறும் முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்று வந்தன. ஆனால் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த முகாமிற்கு யானைகள் செல்லவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/46af25be-e90.jpg)
இதனையொட்டி, அந்த யானைகளின் பராமரிப்பு, சுற்றுப்புறச்சூழல், யானையை கவனிப்பது உள்ளிட்ட அதற்கு தேவையான அனைத்தையும் முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் உள்ள 34 யானைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், தமிழகத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்தைச் சிறப்பாக பராமரிப்பதும், தூய்மையான சுற்றுப்புறச்சூழல், யானையை முறையாக, கருத்தாக கவனிப்பது உள்ளிட்டவைகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததால், இந்த யானைக்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற யானைகளை சிறப்பாக பராமரிக்கப் பரிந்துரைக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“