தமிழக - கேரளா எல்லை பகுதியான கோவை, ஆனைகட்டி பகுதியில் இன்று காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு உள்ள பள்ளி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த யானை, அந்த வழியாக சென்றவர்களை துரத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் வனத்துறைக்கு தெரியவந்ததும், உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் யானையை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பகல் நேரத்தில் யானை வெளியே வந்ததால், அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் யானை தெருவில் நடமாடுவதும், மக்கள் பயத்துடன் ஓடுவதும் காணப்படுகிறது. வனத் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், யானை எந்த சேதமும் ஏற்படுத்தாமல் காட்டுக்குள் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது போன்ற சம்பவம் தொடர்ந்து நிகழ்வதால் வனப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் காட்டு யானைகளை பார்த்தால் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“