Elephants death in Tamil Nadu : தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஒரு யானையின் இறப்பு அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் யானைகள் மனிதர்களை தாக்குவதும், மனிதர்கள் யானைகள் மீது மோசமான தாக்குதலை மேற்கொள்வதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகங்கள் யானைகளின் வாழிடமாக இருக்கிறது. இவை மட்டுமின்றி கோவை, ஈரோடு, மதுரை, தருமபுரி, வேலூர், விருதுநகர் வனக்கோட்டங்கள் என தமிழகத்தில் சுமார் 2700க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்கின்றன.
வாழிடங்கள் துண்டாடப்படுதல் (Fragmentation) , காடுகளை பயிர் விவசாயத்திற்காக மாற்றுவது , உணவு பற்றாக்குறை ஏற்படுதல் ஆகிய காரணங்களால் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு யானைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. 161 குட்டி யானைகள் உட்பட கடந்த 6 வருடத்தில் தமிழகத்தில் மட்டும் 561 யானைகள் உயிரிழந்ததாக தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபினின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ”யானைகளின் இறப்பு” குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது தமிழக வனத்துறை.
2015ம் ஆண்டு 61 யானைகளும், 2016ம் ஆண்டு 95 யானைகளும், 2017ம் ஆண்டு 125 யானைகளும், 2018 ஆம் ஆண்டு 84 யானைகளும் , 2019ஆம் ஆண்டு 108 யானைகளும், 2020 செப்டம்பர் மாதம் வரையில் 85 யானைகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வனக்கோட்டங்களின் அடிப்படையில் காணும் போது கடந்த 6 வருடங்களில் ஈரோட்டில் 167 யானைகளும், கோவையில் 134 யானைகளும் தருமபுரியில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளது. கோவையைப் பொறுத்த வரையில் 2020 ஜனவரி துவங்கி ஜூலை வரையிலான காலகட்டத்தில் 15 யானைகள் உயிரிழந்துள்ளன. சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் 8 யானைகள் உயிரிழந்துள்ளன.
பொதுவாக தங்களுக்கு தேவையான உணவு வனத்தில் கிடைக்காததால் யானைகள் வயலுக்கு வருகைப் புரிகின்றன இதனை தடுக்கும் பொருட்டு மின்சார வேலி வைப்பதால் யானைகள் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழக்கின்றன. சாலை விபத்துகளிலும், வேட்டையாடுதலாலும் கூட யானைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மொத்தமாக 27000 யானைகள் உள்ளன. மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அதிக அளவு யானைகளின் வலசை பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 772 யானைகளும், ஒசூர் பகுதியில் 499 யானைகளும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 294 யானைகளும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 237 யானைகளும் உள்ளன. அதாவது நாட்டின் மொத்த யானைகளின் எண்ணிக்கையில் 10% யானைகள் தமிழகத்தில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.