கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், பெருமாள்கோவில்பதி பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது. இங்கு வாழை, தென்னை உட்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றார். இந்தநிலையில், நேற்று இரவு சுமார் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டங்கள் 3 லட்சம் மதிப்பிலான பயிர்களை முழுமையாக சேதப்படுத்திவிட்டு சென்று விட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும், விவசாய நிலத்திற்குள் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வனத்தையொட்டி இருக்கக்கூடிய விவசாய தோட்டத்திற்கு சோலார் மின் வேலி வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு மின் வேலி அமைக்கப்பட்டால் யானைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றலாம் எனவும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“