Advertisment

எஃல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கு: வி.சி.க கவுன்சிலர் கைது

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், வி.சி.க கட்சியை சேர்ந்தவருமான பிரபாகரன் எஃல்பின் நிறுவன மோசடியில் சம்மந்தப்பட்டதாகக் கூறி நேற்று இரவு சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy VCK councillor arrested

Trichy VCK councillor arrested

திருச்சியை தலைமையிடமாக கொண்டு எஃல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதன் அலுவலகங்கள் இயங்கி வந்தன.

Advertisment

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும், பணம் இரட்டிப்பாக மாறும், வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை, கவர்ச்சியான விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி மக்களிடம் கொண்டுச் சென்றனர்.

இதை நம்பி தமிழ்நாடு முழுவதும், எஃல்பின் நிர்வாகிகளின் ஆசை வார்த்தையை நம்பி அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமான மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்களாக 'ஸ்பாரோ குளோபல் டிரேட்', வராகமணி பிரைவேட், சென்னை, ஜேபி ஓரியண்ட் டெக் மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆர்.எம். வெல்த் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட், இன்பி கேலக்ஸி மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கம், அறம் டி.வி என பல துணை நிறுவனங்கள் நடத்தப்பட்டது.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை முறையாக வழங்காமல் பண மோசடி செய்ததாக பல முறை அந்த நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கமாகி வந்தது. இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் எல்ஃபின் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் திருச்சி கீழப்புலிவார்டு ரோட்டை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் ஒருவர் ஆவார். பிரபாகரன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், விடுதலை தொழிலாளர் முன்னணியின் மாநில துணைச்செயலாளராகவும், திருச்சி மாநகராட்சியின் 17-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நிலையில் சில மாதங்களாக தலைமறைவானார். இந்த நிலையில் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று இரவு சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர். பின்னர் மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பிரபாகரன் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவு சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பிரபாகரன் மீது கடந்த 2002-ம் ஆண்டு பொன்மலையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பதும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு தேர்தலின்போது செலவு செய்வதற்காக காரின் டோர்களில் மறைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி பணம் அரியலூர் அருகே கைப்பற்றப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசாமல் இருப்பது குறித்தும் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் வி.சி.க தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எஃல்பின் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்களில் சிவகாசி புகழ் ஜெயலட்சுமியும் ஒருவர். இவர் எஃல்பின் நிறுவன வாசல் முன்பு பலமுறை சத்யாகிரக போராட்டம் நடத்தியபோதுதான் இந்த வழக்கு மேலும் சூடுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment