ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது; போட்டித் தேர்வு தேவையில்லை என அரசு உயர்நிலைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெயிட்டேஜ் முறையில் தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர்நிலை குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்காக அந்த குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம் வருமாறு:
ஆசிரிய தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடந்து கடைப்பிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட்ட வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கப்படும்.
தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழி வகை இருப்பதால் அதன் படி தர வரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தர வரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உள்பட்டதாகும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம். இதன்படி, அனைவரில் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரி பார்க்கும் அவசியம் ஏற்படாது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படியிலோ அல்லது தர வரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என தீர்மான நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானங்களின் மீது நடவடிக்கைகள் ஏற்படுத்துவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை, பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக விரையில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.