சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெற ‘தொலைபேசி வழி ஆலோசனை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஒரே நேரத்தில் 100 பேர் தொடர்பு கொள்ள முடியும். 044– 46122300, 25384520 ஆகிய எண்களில் இந்த மையத்தை தொடர்புகொள்ளலாம். சென்னையில் தற்போது 23,625 பேர் கொரோனா சிகிச்சை உள்ள நிலையில், அதில் 80% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். பொதுமக்கள் கொரோனா அவசர உதவி, அறிகுறிகள் குறித்த மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மையம், தடுப்பூசி மையம் குறித்த தகவல்களை இந்த மையத்தை தொடர்புகொண்டு பெறலாம்.
வீட்டுத் தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் உதவிகள், மருத்துவ அவசர உதவிகளுக்கு இந்த மையத்தை அணுகலாம்.மேலும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து இந்த மையத்தில் இருந்து தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு இந்த மையத்திற்கு 4 லட்சம் அழைப்புகள் வந்தது. பின்னர் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டது.
இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானதால் இந்த மையத்தை மீண்டும் திறந்துள்ளோம். கடந்த ஆண்டு ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 2,393 இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை கடந்துவிட்டோம். வீட்டு தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க, தேவையற்ற நிகழ்வுகளை தடுக்கவும் இந்த மையம் பெரிதும் உதவியது. அத்தியாவசிய பொருட்களுக்கான உதவியை இந்த மையம் மூலம் பெற முடிந்தது.
இந்த வருடம் கூடுதலாக கொரோனா தடுப்பூசி குறித்து எழும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறலாம். மூன்று ஷிப்டில் பணிபுரியும் தன்னார்வலர்களுடன் 24 மணி நேரமும் இந்த மையம் இயங்கும். மேலும், சென்னையில் உள்ள வீடுகளில் கிருமிநாசினி தெளிக்க விரும்புவோர் மற்றும் கோவிட் தொடர்பான எந்தவொரு உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"