கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விஜய் என்பவரை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.
கடலூர் மாவட்டம், விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலையில் மூன்று லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய விஜய் என்ற நபர் எம். புதூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது, விஜய்யை பிடிக்க முயன்றதில், அவர் போலீசாரை அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது.
இதனால், விஜய் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் விஜய் உயிரிழந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் மீது விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, "கடலூரில் நான்கு வழிச்சாலை அருகே மூன்று லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாகவும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
இக்கூட்டத்திற்கு தலைவராக செயல்பட்ட விஜய் என்ற நபர் எம். புதூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது, போலீசாரை விஜய் அரிவாளால் வெட்டினார். இதனால், வேறு வழியின்றி தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, படுகாயமடைந்த விஜய்யை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.