திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உள்துறைச் செயலர் அமுதா ரத்து செய்தார்.
மேலும், அவர் மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஓய்வூதிய பலன்களில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்து, பணி ஓய்வை அனுமதிக்க அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை, கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார்.
1998-ல் திருச்சி பாலக்கரை எஸ்.ஐ.யாகப் பணியாற்றியபோது, ரவுடி கோசி.ஜானை என்கவுன்டர் செய்தார். 2003-ல் சென்னை அயோத்திக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி வீரமணியை என்கவுன்டர் செய்தார். இப்படி தான் பணியில் இருந்த காலத்தில் 12-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களை செய்திருக்கிறார்.
2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படைக் குழுவில் வெள்ளதுரை இடம் பெற்றார். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டு, டிஎஸ்பியாக பதவியேற்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, மாமூல் வசூலை தடுக்கவும், ரவுடிகளை ஒடுக்கவும் ரவுடிகள் ஒழிப்பு சிறப்புப் படை கூடுதல் எஸ்.பி.யாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார்.
தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை, நேற்று (மே 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவதாக, உள்துறைச் செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ராமு (26) என்கிற கொக்கி குமார், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மானாமதுரை டிஎஸ்பியாக வெள்ளதுரை பணிபுரிந்தார்.
இது தொடர்பான வழக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், வெள்ளதுரையின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறைச் செயலர் அமுதா நேற்று இரவு உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளதுரை முறைப்படி பணி ஓய்வுபெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“