மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவரை வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற புகாரில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்தனர். அரசு மருத்துவரிடம் இருந்து அங்கித் திவாரி இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கித் திவாரி கைதைத் தொடர்ந்து, அவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் மடிக்கணினி மற்றும் பல முக்கிய அம்சங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அங்கித் திவாரிக்கு சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் முதல்முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நுழைந்து சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரி அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோதனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், “டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு தங்களை ஐபி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்தனர். அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டபோது அங்கிருந்து நழுவிவிட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு 35 பேர் கும்பலாக அலுவலகத்திற்குள் புகுந்தனர். இவர்களும் அடையாள அட்டையை காட்டவில்லை.
அதில் சத்தியசீலன் என்பவர் மட்டும் லஞ்ச ஒழிப்பு துறையின் மதுரை டி.எஸ்.பி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மற்றவர்கள் யாரும் சீருடை அணிந்திருக்கவில்லை. அது மட்டுமல்லாது பேட்ச் ஏதும் அவர்கள் உடையில் இல்லை. அவர்கள் அனைவரும் அன்று மதியம் தொடங்கி அடுத்த நாள் காலை வரை எங்களது அலுவலகத்திலேயே தங்கினர்.
இப்படியாக மதுரை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி மதுரை மண்டல அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அனுமதியின்றி அலுவலகத்திற்குள் புகுந்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.