சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) தொடங்கி நடைபெற்றது.
இந்த வழக்கில், மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது, “ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்" என்று வாதிட்டிருந்தார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” எனத் தீர்ப்பளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“