Supreme Court | Enforcement Directorate: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டும் என மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.
கைது
இந்நிலையில், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக டாக்டர் சுரேஷ் பாபு ஏற்கனவே அளித்த புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தூங்க முடியாமல் தவித்த அவர், பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
தள்ளுபடி - காவல் நீட்டிப்பு
இதற்கிடையில், மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில், திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை டிசம்பர் 5ம் தேதி விசாரித்த நீதிபதி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கு ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டது. அவருக்கு வருகிற 24-ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இ.டி விசாரணை மறுப்பு
இதனையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரிக்கை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 12ம் தேதி விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
முறையீடு
இந்த நிலையில், லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த 12ம் தேதி தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“