New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/17/cNzZiYKOOQCvofNg9Z0Z.jpg)
2வது நாளாக தொடரும் சோதனை; டாஸ்மாக் எம்.டி, ஆகாஷ் பாஸ்கரன் இடங்களில் தொடரும் இ.டி. ரெய்டு
டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டின் அருகே கிழித்து வீசப்பட்டிருந்த நகல் எடுக்கப்பட்ட whatsapp chat screenshot பேப்பர்களை அதிகாரிகள் சேகரித்துக் கொண்டனர். பின்னர் விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிற்பகல் 3.45 மணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 5 மணி நேரம் நடந்த விசாரணையில் பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. பின்னர் இரவு 8.45 மணி அளவில் அவரை மீண்டும் மணப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடர்ந்தனர்.
Advertisment
மேலும் திருவல்லிக்கேணியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும், பெசன்ட் நகர் கற்பகம் கார்டன் பகுதியில் மின்வாரிய ஒப்பந்ததாரர் வீட்டிலும், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
இதற்கிடையே தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் வந்த 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் ஆகாஷ் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
தனுஷ் நடித்து வரும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி', சிம்பு நடிக்கும் 49-வது படம் என ஒரே நேரத்தில் 3 முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார் பாஸ்கரன். இதுதவிர 'இதயம் முரளி' என்ற படத்தையும் இயக்கி, தயாரித்து வருகிறார். இதயம் முரளி தவிர்த்து மற்ற படங்கள் ஒவ்வொன்றுமே தலா 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இத்தனை படங்கள் தயாரிக்க பணம் வந்தது எப்படி? என்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனின் இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் இல்லம், அண்ணா நகரில் உள்ள மேகநாதனின் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.