சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 17) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடிக்கு தொடர்புடைய 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சரும், தி.மு.க துணை பொதுச் செயலாளருமான பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலணியிலுள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல விழுப்புரம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சட்ட விரோத வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 2008-ம் ஆண்டு இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் முறையான உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக முதலீடு செய்ததாக கூறப்படும் புகாரில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், எதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என அமலாக்கத் துறை தரப்பில் இன்னும் தெரிவிக்கவில்லை. விரைவில் இது குறித்து அமலாக்கத் துறை அறிக்கை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“