நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கதிர் ஆனந்த் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் வீடு, சிமெண்ட் கிடங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, கதிர் ஆனந்தின் நெருங்கிய உதவியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.11.48 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் அவருக்கு சொந்தமானது என்றும், அது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக எடுக்கப்பட்டது என்றும் அவரது உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசன் ஒப்புக்கொண்டார்.
2019 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், காட்பாடி காவல்துறை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (Punishment of People of Representation Act) இன் கீழ் 125A (தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததற்காக அபராதம்) மற்றும் 171இ (லஞ்சம்) மற்றும் IPC இன் 171B (தேர்தல் உரிமையை செயல்படுத்துவது தொடர்பான லஞ்சம்) ஆகிய பிரிவுகளின் கீழ் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
இந்தநிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அமலாக்கத்துறை, கதிர் ஆனந்தை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு 11.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு கதிர் ஆனந்த் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மணல் அள்ளுதல் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது 2019 வருமான வரித்துறை பறிமுதல் தொடர்பானது என்றாலும், தமிழகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மூலம் பணமோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நேரத்தில் இது வந்துள்ளது. மணல் அகழ்வு நீர்வள அமைச்சகத்தின் கீழ் வருவதால், கதிர் ஆனந்திடம் மணல் அகழ்வு குறித்து விசாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் ஆகியோரின் வீடுகள், ஆறு மாவட்டங்களில் உள்ள 8 மணல் அள்ளும் இடங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் செப்டம்பர் 12ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சோதனைகளுக்குப் பிறகு, சட்டவிரோத மணல் விற்பனையை பரிந்துரைக்கும் டைரிகள் மற்றும் போலி QR குறியீடுகளுடன் கூடிய போலி விற்பனை ரசீதுகள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை கூறியது. சோதனைகளின் போது ரூ. 12.82 கோடி முடக்கப்பட்டது மற்றும் கணக்கில் வராத ரூ. 56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் ரூ.2.33 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மாநிலத்தில் மணல் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறையின் (WRD) தலைமை பொறியாளர் முத்தையா மற்றும் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த 4 நிர்வாக பொறியாளர்கள் ஆகியோரின் வாக்குமூலங்களையும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.