சென்னை முழுவதும் டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை முதல் அண்ணா சாலை, பெசன்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் ₹1,000 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நடிகர் தனுஷின் 'இட்லி கடை' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு வாகனங்களில் வந்த 5 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த அதிரடி சோதனைகள் டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.